தமிழ்நாடு

சேலம்: லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூவர் கைது

சேலம்: லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூவர் கைது

webteam

ஆத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து தலைச்சுமையாக லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூன்று பேரை கைதுசெய்து, 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை வனப்பகுதியில் மர்ம கும்பல் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் சாரயத்தை கடத்தி வந்து ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது.

அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து சாராய வேட்டையில் ஈடுபட்டபோதிலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்துள்ளனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், கல்பகனூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் லாரி ட்யூப்பை தலையில் சுமந்துகொண்டு அவ்வழியாக வந்த மூன்று பேரையும் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் மூன்று பேரும் லாரி டியூப்கள் மூலம் கல்வராயன் மலையில் இருந்து வனப்பகுதி வழியாக கள்ளச்சாராயத்தை தலைச்சுமையாக கடத்தி வந்தது தெரியவந்தது, இதனையடுத்து பெத்தநாயக்கன்பாளையம் தாலூக்கா சூலாங்குறிச்சி அருகே பாச்சங்காடு கிராமத்தை சந்திரன்(28), கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை (59), செந்தில்குமார் (47) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.