BTS - காட்பாடி ஜங்ஷன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தென்கொரிய BTS குழுவினரை காண 10,000 ரூபாயோடு வீட்டைவிட்டு வெளியேறிய 3 கரூர் சிறுமிகள்!

உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்ட பின், தென்கொரியாவும் ஒன்றுதான், தேனாம்பேட்டையும் ஒன்றுதான். தென்கொரிய BTS பாப் குழுவினரை பார்க்க வேண்டும் என வீட்டுக்குத் தெரியாமல் வெளியேறியுள்ளனர் கரூரைச் சேர்ந்த 3 மாணவிகள்.. என்ன நடந்தது?பார்க்கலாம்..

webteam

செய்தியாளர்: கண்ணன்

2K கிட்ஸ் மத்தியில் கொரியன் பாப் குழுவை சேர்ந்த BTS ரொம்பவே ஃபேமஸ். இக்குழுவின் ஒவ்வொரு கலைஞருக்கும் உலகமெங்கும் மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அவ்வளவு ஏன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட 2022 ஆம் ஆண்டு பிடிஎஸ் குழுவினரை நேரில் சந்தித்த நிகழ்வும் நடந்துள்ளது. அத்தனை பிரபலமான BTS குழுவினரை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கரூர் ராயனூரில் இருந்து 3 மாணவிகள் புறப்பட்டுள்ளனர்.

BTS

கரூரில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை காணவில்லை என்று பெற்றோர் தேடிய நிலையில், காவல்துறையில் புகார் அளித்தனர். மாணவிகளை தேடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தது காவல்துறை.

தொடர்ந்து விசாரித்தபோது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகளில் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமிகள் மூவரும் கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து கையிலிருந்த பணம் போதாதென நினைத்து திரும்பி கரூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் அவர்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து மூன்று சிறுமிகளும் கரூர் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறை விசாரித்தபோதுதான் BTS குழுவினரை சந்திக்க தென்கொரியா செல்வதற்காக அவர்கள் சென்னை சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகள் கரூரில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டனர்.

Police station

BTS குழுவினர் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நிலையில், அவர்களைப் பார்க்க, தமிழகத்தின் ஒருமூலையில் இருந்து சிறுமிகள் தென்கொரியா செல்ல நினைத்த சம்பவம், பல பெற்றோர்களை யோசிக்கவைத்திருக்கிறது.