Accused pt desk
தமிழ்நாடு

நாகர்கோவில்: தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் - நண்பர்கள் உட்பட 3 பேர் கைது

நாகர்கோவிலில் அவதூறாக பேசிய தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மகன் கைது. விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்.

webteam

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (65). செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 10ஆம் தேதி பணி முடிந்து தனது வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்த அவர், படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்துள்ளனர்.

Hospital

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பிரபாகரனின் மகன் அனீஷ்குமார், “எனது தந்தைக்கு வலிப்பு நோய் உள்ளது. அதனால் வண்டியில் இருந்து மயங்கி விழுந்திருக்கலாம். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம். சிகிச்சை மட்டும் கொடுங்கள்” எனக் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பிரபாகரன் கடந்த 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மீண்டும் “போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம்; உடலை தாருங்கள். வீட்டிற்கு கொண்டு செல்கிறேன்” என அனீஷ்குமார் மருத்துவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் பிரபாகரன் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களும், தலையில் வெட்டுக் காயமும் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சுசீந்திரம் போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டதோடு பிரபாகரன் விழுந்து கிடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பிரபாகரனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வெட்டி கீழே தள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன.

Police station

இதைத் தொடர்ந்து போலீசார், விசாரணையின் கோணத்தை மாற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பிரபாகரன் மகன் அனீஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ததை அனீஷ்குமார் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அனீஷ்குமாருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், பிரபாகரன் அனீஷ்குமார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அனீஷ்குமார், தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு தன்னுடன் பணியாற்றிய சுதன் மற்றும் ராஜா ஆகியோரை பயன்படுத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சுதன் மற்றும் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் அவர்களுடன் சேர்த்து அனீஷ்குமாரையும் கைது செய்த போலீசார், மூவரையும் சிறையில் அடைத்தனர்.