பா.ஜ.க நிர்வாகி, போலீஸ் உள்ளிட்ட மூவர் கைது புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | காரில் வழிவிடுவதில் தகராறு... இளைஞரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி, போலீஸ் உட்பட மூவர் கைது!

சென்னை பட்டினம்பாக்கத்தில் காரில் வழி விடுதலில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி, போலீஸ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - ஜெ.அன்பரசன்

சென்னை ஜார்ஜ்டவுன் தாயப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (36). இவர் OMR பகுதியில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ராயபுரத்திலிருந்து தனது தோழி ஒருவருடன் TN 04 AP 5899 என்ற காரில் சரியாக 6.20 மணி அளவில் பட்டினம்பாக்கம் வழியாக காரில் சென்றுள்ளார்.

அப்போது பட்டினப்பாக்கம் சிக்னலில் அவருக்கு முன்சென்ற சிவப்பு கலர் TN03 AE 9972 என்ற பதிவெண் கொண்ட ஷிப்ட் கார் ஒன்று, நீண்ட நேரமாக யாருக்கும் வழிவிடாமல் சாலையில் குறுக்காக அங்கும் இங்கும் சென்று திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது.

இதனால் மணிவண்ணனின் கார் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன் காரை கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளார். தொடர்ந்து மணிவண்ணன், முன்சென்ற காரை நோக்கி சென்று “ஏன் திடீரென நிறுத்தினீர்கள்?” எனக்கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஐவர் இவரை தாக்கியுள்ளனர்.

இதைக்கண்ட மணிவண்ணனின் தோழி கூச்சலிடவே, அருகில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது, “நானும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிதான்” என்று கூறியுள்ளார் 5 பேரில் ஒருவரான லோகப்பிரகாசம் என்பவர் தெரிவித்துள்ளார். இதனை அங்கே சுற்றியிருந்த அனைவரும் வீடியோ எடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி எனக் கூறிய நபர் உட்பட அவருடன் பயணம் செய்த மற்ற 4 நபர்களும் அதிக அளவு குடிபோதை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஐந்து நபர்கள் மீதும் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வந்தனர்.

அதன்முடிவில் திருவொற்றியூரைச் சேர்ந்த கோபிநாத் (54), சுடலையாண்டி (50), கார்த்திக் ராஜா (30) ஆகிய மூன்று பேரை பட்டினம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கோபிநாத் என்பவர் ஆயுதப்படை காவலராக பணி புரிந்து வருவதும், கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜா பாஜக நிர்வாகியாக திருவொற்றியூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாதார பிரிவு நிர்வாகியாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவான நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பா.ஜ.க நிர்வாகி போலீஸ் உள்ளிட்ட மூவர் கைது

மேலும், இந்த சம்பவம் நடைபெற்ற போது பட்டினம்பாக்கம் சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர், ‘பொது இடத்தில் அனைவரும் முன்னிலையிலும் நடந்த இந்த தாக்குதலை ஏன் தடுக்கவில்லை’ என விசாரிக்கப்பட்டு வருகிறார்.