தாய் தந்தையை விஷச்சாராயத்துக்கு இழந்த குழந்தைகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி | விஷ சாராயத்தால் உயிரிழந்த தாய் தந்தை... பரிதவித்து நிற்கும் 3 குழந்தைகள்!

வாழ்க்கை நிலையற்றதுதான். ஒரேநாளில் இப்படி ஒரு தலைகீழ் திருப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று யார்தான் அறிவார்? மற்றவர்களின் உயிர்களை துச்சமாக நினைத்து விஷ சாராயம் விற்ற நபர்களால் பல குடும்பங்கள் நிலைகுலைந்துவிட்டன.

PT WEB

செய்தியாளர்: ஸ்ரீதர்

வாழ்க்கை நிலையற்றதுதான். ஒரேநாளில் இப்படி ஒரு தலைகீழ் திருப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று யார்தான் அறிவார்? மற்றவர்களின் உயிர்களை துச்சமாக நினைத்து விஷ சாராயம் விற்ற நபர்களால் பல குடும்பங்கள் நிலைகுலைந்துவிட்டன. அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒன்றைப்பற்றிய பதிவு இது.

உலகமறியா 3 சிறுவர்கள், சுடுகாட்டில் தங்கள் தாய், தந்தைக்கான இறுதிச்சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 10 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவர்கள், சுடுகாட்டில் தங்களுக்குச் சொல்லப்படும் சடங்குகளைச் செய்யும் இந்தக் காட்சிகள் எத்தகைய மனஉறுதி கொண்டவரையும் குலைத்துவிடும்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் - பெற்றோரை இழந்த பிள்ளைகள்

கருணாபுரம் விஷ சாராய சம்பவத்தில் தந்தை சுரேஷ், தாய் வடிவுக்கரசியை இவர்கள் ஒரே நேரத்தில் இழந்திருக்கிறார்கள். பெயிண்டரான தந்தை வலியை மறக்க குடித்த நிலையில், டம்பளரில் ஊற்றியிருந்த விஷ சாராயத்தை ஓம நீர் எனக்கருதி குடித்ததில் தாயும் உயிரிழந்துள்ளார்.

ஆதரவற்று நிற்கும் இந்த மூன்று குழந்தைகளில் மூத்தவரான மகள் கோகிலா 11 ஆம் வகுப்பு படிக்கிறார். பெற்றோரை பறிகொடுத்த துயரமும், குடிப்பழக்கத்தால் பறிபோன உயிர்களை எண்ணிய கோபமும் தெறிக்கிறது இவரது வார்த்தைகளில்...

சுரேஷ், வடிவுக்கரசி

இந்த மூன்று பிள்ளைகளின் உறவினர்கள் இப்போதைக்கு துணை இருந்தாலும் எத்தனை காலம்தான் அவர்களும் கூட வர முடியும்? அவர்களும் தினக்கூலிகள்தான். இந்தக்குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார பலம் இல்லாதவர்கள்தான்.. சுரேஷ், வடிவுக்கரசி தம்பதி இருந்த வீடு ஓராண்டுக்கு முன் தரைமட்டமானது. இதனால் அருகில் வாடகை வீட்டில் இவர்கள் குடும்பத்துடன் வசித்துவந்தனர்.

தாய், தந்தையை இழந்து நிற்கும் இவர்களுக்கு அரசு வீடு தருமா என்று கேட்கிறார்கள் உறவினர்கள். நேற்று வரை குடும்பமாக சிரித்து, சண்டையிட்டு, விளையாடிக் களித்த வீடு, ஒரேநாளில் வெறுமையாகிவிட்டது. இன்னும் எத்தனைக் குடும்பங்கள் இந்த நிலைக்கு ஆளாக வேண்டுமோ தெரியவில்லை. பெற்றோரை இழந்து நிற்கும் இந்தச் சிறுவர்கள் விடுக்கும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் காலம் தமிழ்நாட்டில் எப்போது வரும் என்று தெரியவில்லை.