கைதானவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் அலுவலகம் அருகே வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் - மூவர் கைது

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் அலுவலகம் அருகே வடமாநில தொழிலாளியை குத்திக் கொலை செய்துவிட்டு செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தில், ஆறு மாதத்திற்கு பின் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - செ.சுபாஷ்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடத்தில், 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி அருகிலேயே தங்கி வந்தனர். அவர்களில் சுபேஷ்குமார், சன்னி ஆகியோரும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலம் சுபேல் மாவட்டத்தை சேர்ந்த சுபேஷ்குமார் (18) மற்றும் பீகாரை சேர்ந்த சன்னி (21) இருவரும் இரவு உணவு சமைப்பதற்காக அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

எய்ம்ஸ் அலுவலகம் அருகே அவர்கள் வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், வடமாநில தொழிலாளிகள் இருவரையும் வழிமறித்து அவர்களின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இச்சம்பவத்தில் இருதரப்பினருக்கும் நடந்த தகராறில், அந்த மர்ம நபர்கள் திடீரென கத்தியை எடுத்து இருவரையும் இடது பக்க மார்பில் குத்திவிட்டு அவர்களிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

கத்திக்குத்து பட்ட வடமாநில தொழிலாளி சுபேஷ்குமார் பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரான சன்னி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை செய்த ஆஸ்டின்பட்டி போலீசார், ஆதாயக் கொலை வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். “சம்பவம் நடைபெற்ற பகுதியில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான முகாந்திரம் இல்லாததால் உண்மை குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது” என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே சொக்கநாதன்பட்டி பகுதியில் வழக்கு ஒன்றிற்காக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை பிடித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது அந்த இளைஞர்கள், போலீசார் விசாரித்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இந்த வழக்கில் தாங்கள் சம்பந்தப்படவில்லை எனவும் ஆஸ்டின்பட்டி பகுதியில் வட மாநில தொழிலாளர்களை கத்தியால் குத்திவிட்டு செல்போன் பறித்த சம்பவம்தான் தாங்கள் செய்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாத காலமாக வட மாநில தொழிலாளி கொலை சம்பவத்தை செய்தது யார் என போலீசார் குழம்பி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அவர்களாகவே ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவர்கள் மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் அழகு ரெட்டியபட்டியைச் சேர்ந்தரவிச்சந்திரன் என்பவரது மகன் ராமசாமி (25), திருமங்கலம் முகமது ஷாபுரத்தைச் சேர்ந்தமகேந்திரன் என்பவரின் மகன் சங்கையா (19), திருமங்கலம் ராமசாமி தெருவை சேர்ந்தசெல்வம் என்பவரது மகன் சந்தோஷ் (18) என்பதும் தெரியவந்துள்ளது.

மூவரும் பண தேவைக்காக இது போன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.