செய்தியாளர் - அன்பரசன்
சென்னயில் தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை தனது யூட்யூப் சேனலின் வழியாக வழங்கும் A2D யூட்யூப் சேனலை நடத்தி வருபவர் நந்தா. இவர் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படும் சென்னை அண்ணா சாலை ரிச்சி ஸ்ட்ரீட்டில் யூட்டியூப் vlog எடுப்பதற்காக தனது நண்பர்களுடன் சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த ரவுடிகள் சிலர் இவரிடம் பிரச்னை செய்துள்ளனர்.
அதிலும் சிலர், கொலை மிரட்டல் விடுத்து நந்தாவிடம் பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்நிலையில் இதுதொடர்பாக பதிவிட்ட பிற யூ-ட்யூபர்கள், சென்னை மாநகர போலீசாரை குறிப்பிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். மேலும் எக்ஸ் தளம் வழியாக பலரும் சென்னை காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை கோரினர்.
இதனையடுத்து, சிந்தாதிரிபேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் யூட்யூபரை மிரட்டிய விவகாரத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.