செய்தியாளர் - செல்வ. மகேஷ் ராஜா
மலையாளத்தில் வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம், கொடைக்கானலில் உள்ள குணா குகை பகுதியை பெரும் பேசுபொருளாக மீண்டுமொருமுறை மாற்றியுள்ளது. சுற்றுலா பயணிகள் பலரும், ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அங்கு சென்று ‘கண்மணி அன்போடு’ பாடலை பாடி கொண்டாடி வருகிறது பல நண்பர்கள் குழு.
அப்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பாரத் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூன்று இளைஞர்கள் குணா குகைக்கு சுற்றிப்பார்க்க சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு சென்ற பின்னர் ஆபத்தை உணராமல் தடுப்புக்காக வைக்கப்பட்ட இரும்பு வேலியை தாண்டி, அத்துமீறி குகை பகுதிக்கு சென்று செல்பி மற்றும் வீடியோக்கள் பல எடுத்துள்ளனர். அதனை இன்ஸ்டா - யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவேற்றி லைக்குகள் வாங்க ஆசைப்பட்டுள்ளார்கள் இவர்கள்.
இவர்கள் மூவரும் அத்துமீறி சென்றதை கண்டறிந்த வனத்துறையினர், மடக்கிப்பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் ஏற்கெனவே குகை பகுதிக்கு சென்றதும், அப்பகுதியில் நின்று புகைப்படம் எடுத்ததும் கண்டறியப்பட்டது. அவர்களை விசாரணை செய்த வனத்துறையினர், தொடர்ந்து வனச்சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், “மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் அத்துமீறி ஒரு செயலை செய்தால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஆனால் படம் சொல்லவந்த விஷயத்தை புரிந்துகொள்ளாமல் அத்துமீறி குகைப்பகுதிக்கு இளைஞர்கள் செல்ல முயல்வது, வேதனையாக உள்ளது. இனி வரும் நாட்களில், இதுபோல வேறு எவரும் செல்லக்கூடாது என்பதால் கூடுதல் வன பணியாளர்களை குணா குகை பகுதியில் பணியர்த்துவோம். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்” என்று தெரிவித்துள்ளனர்.