தமிழ்நாடு

சிவகங்கையில் 2ஆம் ஆண்டு புத்தக திருவிழா - சிறப்பான ஏற்பாட்டால் வியக்க வைத்த கலெக்டர்!

சிவகங்கையில் 2ஆம் ஆண்டு புத்தக திருவிழா - சிறப்பான ஏற்பாட்டால் வியக்க வைத்த கலெக்டர்!

webteam

வாசிப்பதின் அவசியத்தை இக்கால இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக ஒரு மாபெரும் புத்தகத் திருவிழா சிவகங்கையில் இரண்டாம் ஆண்டாக அரங்கேற்றப்பட்டு, புத்தக விற்பனையில் சாதனை படைத்து புத்தக விற்பனையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் சுறுசுறுப்பாக செயல்பட்டு, புத்தகத் திருவிழாவை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார். இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இன்றைய இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சினிமா, தொலைக்காட்சி, செல்போன் என பலவிதமான கேளிக்கை விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தி தங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். அவர்களின் எண்ணங்களில் மாற்று சிந்தனைகளை உருவாக்கி வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள புத்தகங்கள் இன்றியமையாத பங்காற்றுகிறது. அதனை நிறைவேற்றும் வகையில் சிவகங்கை நகரில் இரண்டாம் ஆண்டாக புத்தகத் திருவிழா நடந்து முடிந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பல துறை அதிகாரிகளுடன் இணைந்து, சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் செய்து கொடுத்து புத்தக விற்பனையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.

புத்தகத் திருவிழா 2023 -காக 120 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் படைப்பாளிகளின் படைப்புகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சிவகங்கை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக, தமிழகத்தின் கீழடி, கொற்கை, மயிலாடும்பாறை, வெப்பங் கோட்டை போன்ற தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட, 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், சுடு மண்ணால் ஆன ஓடுகள், பானைகள், பாசிகள், உறைகலன்கள், சுடு மணிகள் போன்ற தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இது மற்ற புத்தக கண்காட்சிக்கு மாறாக முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. சென்ற ஆண்டு சிவகங்கையில் நடைபெற்ற புத்தக திருவிழாவிற்கு, பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரத் தயங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான ஒருங்கிணைந்த செயல்பாட்டால், திட்டமிட்டதை விட பல மடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இரண்டாம் ஆண்டு கண்காட்சிக்கு படைப்பாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அரங்கங்களை அமைத்தனர் எனக் கூறிய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, இந்த புத்தகத் திருவிழா யாரும் எதிர்பாராத அளவு 5.45 கோடிக்கு மேல் வசூலை அள்ளித்தந்துள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்களின் சங்க செயலாளர் பப்பாசி முருகன் தெரிவித்ததாகவும் மகிழ்ச்சி கூறுகிறார்.

புத்தகத் திருவிழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் இதுபோன்ற நிகழ்வுகள் தங்களுக்கு வாசிக்கும் திறனை அதிகரிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும், தமிழக அரசு தொடர்ந்து புத்தகத் திருவிழாவை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வாசிப்பை நேசிக்கும் வாசகர்களுக்கும், எதிர்காலத்தை வளமாக்கிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற துடிக்கும் இளைய தலைமுறையினருக்கும் இப்படிப்பட்ட புத்தக திருவிழாக்கள் உற்ற நண்பனாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.