தமிழ்நாடு

ராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்

ராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்

webteam

ராணுவம் விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். 

லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர், இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையிலான காவல்துறையினர், கோவை மாவட்டம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தமிழ்நாடு கேரள எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறுகையில், “6 பயங்கரவாதிகள் கொண்ட குழு தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாகவும், கோவையை நோக்கி நகர்வதாகவும் எங்களுக்கு எச்சரிக்கை கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ராணுவம் மற்றும் விமானப்படையும் தயாராக இருக்கும்படி எச்சரித்துள்ளோம். நகர் முழுவதும் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் உடனடியாக செயல்பட 10 அதிவிரைவு பாதுகாப்புப் படையினர் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பொதுவான உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் உள்ளோம்.அச்சப்படவேண்டிய தேவை இல்லை. தேசிய புலனாய்வு முகமை முன்னர் மேற்கொண்ட நடவடிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை. யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.” எனத் தெரிவித்தார். 

மேலும் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மக்கள் கூடும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.