தமிழ்நாடு

"ஆவின் பால் விலைக்குறைப்பால் அரசிற்கு 270 கோடி நஷ்டம்" - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

webteam

ஆவின்பால் விலைக்குறைப்பால் அரசிற்கு 270 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ரெட்டியார் பட்டியில் உள்ள ஆவின் உற்பத்தி நிலையம், பால் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும் போது, “ஊரடங்கு காலத்தில் மிகவும் அத்தியாவசிய தேவையான பாலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெற்று விற்பனை செய்வது தொடர்பான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆவின் பால் ரூ 3 விலை குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அந்த இழப்பை சரி செய்யும் வகையில் முறையான திட்டமிடலுடன் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பாலின் தினசரி விற்பனை 36 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது அது 39 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன வருவாயை அதிகரிக்க, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டதை போன்று கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின்பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஆவின் பால் மக்களை கூடுதலாக சென்று சேரும் வகையில் கூடுதல் விற்பனை நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாகால களப்பணியில் ஈடுபட்டு வரும் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு கூடுதலாக 200 ரூபாய் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.