தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகளுக்கு கொரோனா - நோய் அறிகுறியுடன் பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகளுக்கு கொரோனா - நோய் அறிகுறியுடன் பாதிப்பு

Veeramani

தமிழகத்தில் 24 மணி நேரத்தில், 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாறியபடி அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பிற்குள்ளாக்கி வருகிறது. அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல என்பது தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது முதியவர்களும், இணை நோய் உள்ளவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது உள்ள கொரோனா இரண்டாம் அலையில், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது குழந்தைகளுக்கு பரவும் கொரோனாவால், பல்வேறு நோய் அறிகுறிகளை காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஒன்று முதல் எட்டு வயதுள்ள குழந்தைகள் கொரோனாவால் இந்தாண்டு அதிகம் பாதித்துள்ளதாகவும், இது கடந்தாண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள ஐந்து மாநிலங்களில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை 79ஆயிரத்து 688குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், மகராஷ்ட்ராவில் 60ஆயிரத்து 884 குழந்தைகள் பாதித்துள்ள நிலையில், 9ஆயிரத்து 882குழந்தைகள் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதே போல சத்தீஸ்கரில் 5ஆயிரத்து 940குழந்தைகள் பாதிக்கப்பட்ட சூழலில், 922பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனத் தெரிய வந்ததுள்ளது. கர்நாடகாவில் 7ஆயிரத்து 237 குழந்தைகளும், உத்தரப் பிரதேசத்தில் 3ஆயிரத்து நான்கு குழந்தைகளும், டெல்லியில் 2ஆயிரத்து 733குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு காய்ச்சல் , மூக்கடைப்பு , வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது வரை குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை அளவிலேயே உள்ளது. இதனால் பெரியவர்கள் கடைப்பிடிப்பதைப் போலவே அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் குழந்தைகள் நிச்சயம் கடைப்பிடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.