தமிழ்நாடு

கோவில் யானை தாக்கி பேச்சிழந்த பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை - உயர்நீதிமன்ற கிளை

கோவில் யானை தாக்கி பேச்சிழந்த பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை - உயர்நீதிமன்ற கிளை

Sinekadhara

சமயபுரம் கோவில் யானை தாக்கி பேச்சிழந்த பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சிந்து என்ற சிந்து லெட்சுமி. ராஜேந்திரன் 3.10.1999-ல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது சிந்துவுக்கு 3 வயது. சாமி கும்பிட்டு முடிந்ததும் கோவில் வளாகத்தில் போய் கொண்டிருந்த போது பிளிறியபடி இருந்த கோவில் யானை தும்பிக்கையால் தாக்கியதால் சிந்துவின் குரல்வளை முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பேசும் திறனை இழந்துவிட்டார். சிந்து சுவாசிப்பதற்காக தொண்டையில் துளையிட்டு செயற்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த குழாய் வழியாவே அவருக்கு திரவ உணவு வழங்கப்படுகிறது. இந்த சூழலிலும் சிந்து பிஇ படித்து முடித்தார்.

கோவில் யானை தாக்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு 20 ஆண்டுகளாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சிந்து தனக்கு 50 லட்சம் இழப்பீடு மற்றும் தன் கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசுவேலை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு மனுக்களை தாக்கல் செய்தார். அதில், ’’சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கோவில் யானையை கோவில் நிர்வாகம் சரியாக பராமரித்திருக்க வேண்டும். ஆனால் கோவில் யானையை சரியாக பராமரிக்காமல் விட்டுள்ளனர். இதனால் யானை என்னையும், தாயாரையும் கடுமையாக தாக்கியது. என் தாயார் காயங்களுடன் உயிர் தப்பினார். நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மாவட்ட ஆட்சியர் நேரில் வந்த இழப்பீடு வழங்கவும், மருத்துவ சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதன்பிறகு எனக்கு எந்த இழப்பீடும் தரவில்லை. மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யவில்லை’’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கோவில் வளாகத்தில் மனுதாரரை யானை தாக்கியுள்ளது. இதற்கு கோவில் நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே மனுதாரருக்கு அரசு வேலையும், 25 லட்சம் இழப்பீடும் 4 வாரத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.