செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அரசுக்கு 2,533 கோடி ரூபாய் குத்தகை பாக்கி வைத்துள்ளது, புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு நிலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பழஞ்சூரில் ஆக்கிரமிப்பில் இருந்த 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பழஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இண்டர்நேஷனல் உறைவிட பள்ளி, கொரோனா காலகட்டத்திற்குப் பின் செயல்படாமல் இருந்துள்ளது. அரசின் ஐந்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பள்ளியை நடத்தி வந்துள்ளனர். ஆனால், விதிமுறைகளை மீறி அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்திருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் குத்தகை காலம் 2013 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், குத்தகை பாக்கித் தொகையான 23 கோடி ரூபாய் செலுத்தாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு பூட்டியிருந்த அறைகளில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்ததையடுத்து, சீல் வைத்தனர்.
மீட்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இடத்தில் அரசுக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.