த.வெ.க. தலைவர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக மாநாடு அனுமதி மனு - அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய தமிழ்நாடு காவல்துறை!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: கே.காமராஜ்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அண்மையில் அக்கட்சிக்கான கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அந்த கொடியில் இடம்பெற்றிருக்கும் யானைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொருபக்கம் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தை தேர்வு செய்து செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த நாள் குறித்துள்ளார்.

தேர்வு செய்து 85 ஏக்கர் பரப்பளவு

முதல் மாநாட்டை பிராமாண்டமாக நடத்த 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெகா இடத்தை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மாநாடு நடத்த அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எஸ்.பி. அலுவலகத்திலும் கடந்த 28 ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதே நாளில் ஏ.டி.எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விக்கிரவண்டி வி.சாலையில் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து காவல்துறை சார்பாக 21 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் கேட்டுள்ள கேள்விகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

1. தாங்கள் கொடுத்துள்ள பார்வையில் கண்ட 28.08.2024 ஆம் தேதியிட்ட மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?.

2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம்?

3. தாங்கள் 23.09.2024 அன்று மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? யார் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றது?

4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல்.

5. மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவுள்ள நபர்களின் பெயர் விபரம்.

6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.

7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.

8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.

9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.

10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விபரம்).

vijay

11. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விபரம் மற்றும் சீருடை விபரம்?

13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விபரம்.

14.மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விபரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்... இதர.,)

15. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு, பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.

16. மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம்.

17. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விபரங்கள்.

18. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?

19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விபரம்.

20. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?

vijay

21. மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விபரம்.

என மொத்தம் 21 கேள்விகளை கேட்டு காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு சில நாட்களுக்கும் பதிலளிக்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.