Fisherman pt desk
தமிழ்நாடு

நெடுந்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; வலைகளை வெட்டி வீசி இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் தொடர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 540க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளத் துறையினரால் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து விட்டு நெடுந்தீவு கடல் பகுதி வழியாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

boat

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், படகுகளை விரட்டி அடித்தனர். இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி கடலில் தூக்கி வீசியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் சகாயம் ஆகியோருக்கு சொந்தமான படகில் சென்ற பெக்கர், மார்ட்டின், மணி, சிதம்பரம், சாமுவேல், லெனின், ரஞ்சித், இளங்கோ, ஆசோன், லிஸ்டன் உள்ளிட்ட 23 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர், மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், பின்பு தமிழக மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

boat

கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட 46 மீனவர்களில் 28 மீனவர்கள் மாத்திரமே இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இலங்கையில் இருக்கின்றனர், எஞ்சிய ஆறு பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் தொடர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.