தமிழ்நாடு

நாமக்கல்லில் லாரியில் கடத்தப்பட்ட 210 கிலோ கஞ்சா - மடக்கிப் பிடித்த போலீஸ்

நாமக்கல்லில் லாரியில் கடத்தப்பட்ட 210 கிலோ கஞ்சா - மடக்கிப் பிடித்த போலீஸ்

webteam

ஆந்திராவிலிருந்து நாமக்கல் வழியாக திண்டுக்கல்லுக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட 21 லட்ச ரூபாய் மதிப்பிலான 210 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 நாமக்கல் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் சேலம் ரோடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு லாரியை மறித்து சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சுமார் 2 கிலோ எடை கொண்ட 105 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதில் இருந்த  21 லட்சம் மதிப்புள்ள 210 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட  தேனி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (42), உத்தமபாளையத்தை சேர்ந்த குமார் (43), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலையா (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பொட்டலங்களாக மாற்றி எடுத்துவரப்படும் இந்த கஞ்சாக்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ 62 லட்சம் மதிப்புள்ள, சுமார் 620 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதும் அது தொடர்பாக 17 கைதும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.