2020ல் சென்னை உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீரே இருக்காது என நிதி ஆயோக் அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாலையெங்கும் மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் அவ்வபோது போராட்டங்களும் நடைபெறுகிறது. தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு ஐ.டி கம்பெனிகளில் வீட்டில் இருந்தே வேலை செய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு நிலத்தடி நீர் குறைந்து போனதும் காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட நாட்டின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுவிடும் என்றும், அதன் காரணமாக 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னை நகரில் 3 ஆறுகள், 4 நீர்நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், மற்றும் 6 காடுகள் முற்றிலும் வறண்டுவிட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் 2030 ஆண்டில் நாட்டிலுள்ள 40 விழுக்காடு மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்றும் நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்தாண்டு சென்னை உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீரே இருக்காது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.