2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை புதிய தலைமுறை
தமிழ்நாடு

🔴 LIVE | தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை | அமைச்சர் தங்கம்தென்னரசு உரை - விரிவான முழு தொகுப்பு!

2024 - 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

PT WEB

கூடியது தமிழ்நாடு சட்டப்பேரவை

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை காலை 10 மணி அளவில் கூடியது. இதில் முதல்வரை வாழ்த்தி கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கியுள்ளார். நிதியமைச்சரின் உரையை, கீழ்க்காணும் லிங்க்-ல் காணலாம்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை

“தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் இலக்கியங்களை மொழிப்பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 2 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அறிவிப்பு.

2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை

‘தரணியெங்கும் தமிழ்’ என்பதன் கீழ் மொழிப்பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பெற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய இடங்களை கண்டறிய ஆழ்கல் ஆய்வு செய்யப்படும். கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கீழடி திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2030-க்குள் 8 லட்சம் கான்கீரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடையாறு நதிச் சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் முதன்மை நதிகள் புனரமைப்புக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சென்னைத் தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் ‘தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்’ கொண்டுவரப்படும்.

5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்காக ரூ.365 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 2030-க்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு உருவாக்கப்படும்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம் - ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் - அதற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாற்று பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்!

காலை உணவுத்திட்டம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ.13,720 கோடி ஒதுக்கப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவிப்படுத்தப்படும். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்திற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு. ஊரகப்பகுதிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதிகளிலுள்ள அரவு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள அரவு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்

ரூ .300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும். புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

கடல்சார் நீர் விளையாட்டு மையம்

1 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன் தரப்படும். 1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஆறு மாத உறைவிடப் பயிற்சி தரப்படும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை & அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் திறக்கப்படும்.

கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1100 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ. 2,483 ஜவுளி பூங்கா அமைக்கப்படும். சென்னை, கோவையில் ரூ.26 கோடியில் தோழி அரசு மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். 2024-25 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்று பாலினத்தவரைப் பணியமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும். சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, சேலத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.

நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் மாநில தரவு மையம் மேம்படுத்தப்படும். முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் செயல்படுத்தப்படும். பசுமை ஆற்றல் நிறுவனம் தோற்றுவிக்கப்படும். அலையாத்திக்காடுகள், பவளப்பறைகள், எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த ரூ.1675 கோடி நிதி வழங்கப்படும். தஞ்சாவூரில் ரூ 120 கோடியில் சிப்காட் ஐடி பார்க் அமைக்கப்படும்.

2024-2025 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் புதிதாக 3,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம்; கோயம்பேடு- ஆவடி; பூந்தமல்லி - பரந்தூர் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும்.

பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். பழங்குடியினத்தவரை மேம்படுத்த ‘தொல்குடி’ என்ற திட்டம் அமல்படுத்தப்படும். அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு. கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைத்திட ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 1000 ஆண்டிகள் பழமையான கோயில்கள் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

'நீலக் கொடி கடற்கரைச் சான்றிதழ்'-க்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறளகம் நவீனப்படுத்தப்படும். கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இ.சி.ஆர்-ல் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். சென்னை முட்டுக்காடு அருகே 3 லட்சம் சதுர அடியில் இந்த அரங்கம் அமைக்கப்படும்

ரூ.25 கோடியில் மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் அமைக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்; ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்; இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் & உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். ரூ.20 கோடியில் 'கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும். தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்..!

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்காக அத்திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்படும்.

சொந்த வரிவருவாய் ரூ,1,95,173 கோடியாக உயரும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மேலும் மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதிலும் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இயற்கை பேரிடர்களால் தமிழக அரசின் நிதிநிலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும்.

இருப்பினும் தற்போதைக்கு 2023-24ம் நிதியாண்டில் மாநிலத்தில் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காமல் 3.46%-ல் இருந்து 3.45% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 0.01 விழுக்காடு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மெட்ரோ ரயில்

வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில அரசின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக உயரும். பேரிடர்களால் நிதி நெருக்கடியை சந்தித்தபோதிலும் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதியாக இருக்கிறோம். மானிய செலவுகள் ரூ.1.47 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது”

தமிழ்நாடு பட்ஜெட் 2024 - 25

பட்ஜெட் குறித்து டிஜிட்டல் பிரிவு செய்தியாளர்கள் மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலை, கீழுள்ள இணைப்பில் காணலாம்.

நிறைவடைந்தது தமிழ்நாடு பட்ஜெட் உரை!

இவ்வாறாக, தமிழ்நாட்டின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து தனது உரையை நிறைவு செய்தார்.