2018ஆம் ஆண்டு ஆண்டின் விளிம்பில் நாம் இருக்கிறோம். இன்று நள்ளிரவு வந்தால் இந்த வருடம் முடிகிறது. இந்த வருடத்தின் இறுதி நாளான இன்று, நாம் நினைவு படுத்த பல நிகழ்வுகள் இருக்கிறது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு என்பது பல மறக்க முடியாத சம்பவங்களுடன் கடந்து சென்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கலைஞர் என அனைவராலும் அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு.
தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர். பெயர் மட்டுமல்ல இவரின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோ ஒரு வகையில் பாடமாகவே இருக்கிறது. திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கலைஞரின் அரசியல் தடத்தை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3ம் தேதி, 1924ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.
இளம் வயதிலேயே தம்மை சமூக இயக்கங்களில் இணைத்துக் கொண்ட கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து, அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்.
தோல்வியைச் சந்திக்காதவர்
தாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடிக்கிறார். திமுக துவக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவரும் கருணாநிதி, திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டார். இதுமட்டுமல்லாது தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை 5 முறை அலங்கரித்தவர். அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969ல் முதல்முறையாக முதலமைச்சரானார். அப்பதவியில் 1971ம் ஆண்டு வரை நீடித்தார். தொடர்ந்து 1971 முதல் 1976 வரை 2வது முறையும், 89 முதல் 91 வரை மூன்றாவது முறையும், 1996 முதல் 2001 வரை நான்காவது முறையும், 2006 முதல் 2011 வரை ஐந்தாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.
திமுகவைக் கட்டிக் காத்தவர்
கருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, திமுக இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்தது. 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க. உருவானது. 1993 ஆம் ஆண்டு வைகோ தலைமையில் கட்சி பிளவைச் சந்தித்தது. இந்த இரண்டு பிரிவுகளை மீறியும், கட்சி பலவீனமடையாமல் காப்பாற்றி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும்
அரசியல் வாழ்வில் விமர்சனங்கள்
ஆரம்பத்தில் காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பின்னாளில் அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இலங்கை போரின் போது முதலமைச்சர் பதவியிலிருந்தும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, 2ஜி புகாரில் தி.மு.கவைச் சேர்ந்தவர்களும் தி.மு.க. தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அடிபட்டது, ஆகியவை அவர் சந்தித்த நெருக்கடிகள்.
இலக்கியத்துறையில் இடையறாத பணி
அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முரசொலியில் அவர் எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவரும் தொடர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது.
இத்தகைய தலைவரின் மறைவைக் கொண்ட சோகமான ஆண்டாக 2018 திகழ்கிறது. அதேசமயம் வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவைப் பெற்ற பெருமையையும் 2018ஆம் ஆண்டு அடைந்துள்ளது.