முதுமக்கள் தாழி pt web
தமிழ்நாடு

தென்காசி: 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி - வாசுதேவநல்லூர் அருகே கண்டுபிடிப்பு

சங்கரன்கோவில் அருகே மலையடிவாரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் பண்டையத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மேலும் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

PT WEB

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் அருகே தாருகாபுரம் கிராமம் உள்ளது. அங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நடைபெற்றபோது அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் மணல் எடுக்கத் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கற்களும், பானைகளுமாக காணப்பட்டதால் அங்கு மணலை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அது குறித்து கிராம மக்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த சென்னை தரமணியில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் தொல்லியல் துறை மாணவர் விஜயக்குமார் மற்றும் அவருடன் பயிலும் மாணவர்கள் தாருகாபுரம் மலையை சுற்றிப் பார்வையிட்டு ஆய்வு செய்யும் போது அங்கு முதுமக்கள் தாழி இருப்பதை அறிந்தனர். உடனடியாக சிவகிரி வட்டாட்சியருக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாருகாபுரம் கிராமநிர்வாக அலுவலர் காளீஸ்வரி நேற்று மலையடிவாரத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

மலையடிவாரத்தில் ஆங்காங்கே காணப்படும் குழிகளில் முதுமக்கள் தாழி காணப்படுகின்றன. மேலும், சமதளத்தில் பானையின் கைப்பிடி மட்டும் வெளியே தெரியும் வகையில் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. மலையைச் சுற்றிலும் மண்பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. மேலும் இறந்த சின்னக் குழந்தைகளை அடக்கம் செய்ததற்கான அடையாளமாக சிறிய முதுமக்கள் தாழிகள் ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதும் உள்ளன. எனவே அந்தப் பகுதி பண்டைய தமிழர்களின் இடுகாட்டு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மலையைச் சுற்றிலும் முதுமக்கள் தாழி மட்டுமே காணப்படுகின்றன. அதில் எலும்புகள் எதுவும் காணக்கிடைக்கவில்லை.

மலையின் தென்புறம் 1 கி.மீ. தொலைவில் நிட்சேப நதி உள்ளதால் அந்தப் பகுதியில் பண்டைத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான நிறைய அடையாளங்கள் கிடைக்கும். எனவே அங்கு தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.