விழுப்புரம் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் பாழடையும் கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டுமன தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமணத் தளங்கள் தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது. இந்நிலையில் செஞ்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள நெ.பட்டி கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குபாறை என்கிற மலைக்குன்றில் கி.பி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு செக்கந்தண்ணி என்பவர் ஒரு சமணப்பள்ளி அமைத்து கொடுத்தார் என்ற செய்தியைத் தெரிவிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செஞ்சியிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது தொண்டூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பஞ்சனார்படி என்ற மலைக்குன்றில் தெற்கு வடக்காக மூன்று சமண படுக்கைகள் உள்ளன. இங்கு கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் அகழ் ஊரைச் சேர்ந்த அறமோசி என்பவர் அமைத்துக்கொடுத்த சமணப் பள்ளி என உள்ளது. இந்தக் கல்வெட்டுதான் நடுநாடு என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் மிகப்பழமையான கல்வெட்டு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலையின்மேல் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளதையும் காணமுடிந்தது.
இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, சமணப் பள்ளி, சமணப்படுக்கை, கற்சிற்பம், பாறை ஓவியம் உள்ளிட்ட அனைத்தும் முறையான பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி பாழடைந்து வருவதுடன், கல் உடைபோரால் பாறைகள் உடைக்கப்படும் அபாயமும் உள்ளது. பல ஆய்வாளர்களும் இக்கல்வெட்டுகளை வெளியிட்டும், இதுவரை மத்திய மாநில அரசுகள் இதனை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இல்லை, முறையான ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை.இதனை உடனடியாகத் தொல்லியல்துறை கட்டுபாட்டில் கொண்டுவந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.