இலுப்பூரில் அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வருபவர் ஆசிக் அசன் முகமது. மருத்துவரான இவர், முக்கணாமலைப்பட்டி அரசு மருத்துமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு இவரின் சகோதரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரை பார்க்க குடும்பத்தோடு புதுக்கோட்டை சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அருகே உள்ளவர்கள் தொலைபேசி மூலம் மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர் ஆசிப் அசன் முகமது வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் காவல்நிலைய போலீசார், மோப்பநாய் தீரனை அழைத்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். அரை கிலோமீட்டர் தூரம் வரை ஓடிச்சென்ற மோப்பநாய் திரும்ப அவரது வீட்டிற்கே வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை எஸ்பி. வந்திதா பாண்டே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.