நிலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் விரிசல் pt web
தமிழ்நாடு

கொடைக்கானல்|”அது சதம்பல் பகுதி.. இயல்புதான்” 200 அடி நீளத்திற்கு பூமியில் பிளவு.. அச்சத்தில் மக்கள்!

கொடைக்கானலில் மேல்மலை வனப்பகுதிக்கு உள்ளே, 200 அடி நீளத்துக்கு பூமியில் ஏற்பட்ட பிளவு, மலைகிராம மக்களை அச்சுறுத்தி விட்டது. அண்மையில் வயநாட்டில் நேரிட்ட பேரழிவு, அவர்களின் நினைவில் வந்து சென்றதால், அச்சம் இரண்டு மடங்கானது.

PT WEB

செய்தியாளர் செல்வ. மகேஷ் ராஜா

திண்டுக்கல் மாவட்டத்தில் குளுகுளு கோடைவாழிடமான கொடைக்கானல் மலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இவற்றில் மேல்மலையில் அமைந்துள்ள ரம்மியமான கிராமம் தான், கிளாவரை... இந்த கிராமத்தையொட்டி இருக்கும் செருப்பான் ஓடை வனப்பகுதி, ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்குள் அமைந்துள்ளது. கிளாவரை கிராமத்தில் இருந்து, செருப்பபான் ஓடை காட்டுப் பகுதிக்குச் செல்லும் அடர்ந்த வனத்தில், 200 அடி நீளத்துக்கு பூமியில் பிளவு ஏற்பட்டது. அதன் அகலம் 2 அடி வரை இருந்தது.

காட்டு வழியே சென்ற கிராம மக்கள், இதைக் கண்டு அதிர்ந்து போயினர். அண்மையில், கேரள மாநிலம் வயநாட்டில் நேரிட்ட நிலச்சரிவு எனும் பேரழிவை எண்ணிப்பார்த்து, அவர்கள் அச்சத்தில் மூழ்கினர். மண்ணில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, மேலும் அதிகரிக்கும் முன்பே, இதுபற்றி நிலவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து, தங்கள் அச்சத்தைப் போக்குமாறு கிளாவரை மக்கள் வலியுறுத்தினர்.

இதுபற்றி கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமனிடம் கேட்டபோது, துளிகூட அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார். பூமியில் பிளவு ஏற்பட்டுள்ள செருப்பான் ஓடை வனப்பகுதி, மிகச்சரியாக இரண்டு மலைகள் இணையும் பகுதியில் அமைந்திருப்பதால், பூமிக்கு அடியில் சதம்பல் பகுதியாக உள்ளது. சதம்பல் என்றால் ஈரநிலம் என்று பொருள். இந்த செருப்பான் ஓடையில், மண்ணுக்குக் கீழே, சதம்பலாக அமைந்துள்ளது. நீர்வழிப்பாதையில் சதம்பலுக்கு மேலே, மலைச்சரிவுகளில் இப்படியான பிளவுகள் ஏற்படுவது இயல்புதான் என்று, பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இவர்கள், அரசாங்க ஆவணங்களின்படி 900 ஆண்டுகளாக அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளே வசித்து வருகின்றனர்.

வனத்துறையினர் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு, இதுபோன்ற ஒரு வெடிப்பை பார்த்துள்ளனர். இதுபற்றி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் புவியியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்துள்ளனர். மண்ணில் இப்படியான பிளவு ஏற்படுவது இயல்புதான் என்று கூறிய நிலவியல் நிபுணர்கள், வயநாடு பாதிப்பு போல நிகழுமா என்று எண்ணி அஞ்ச வேண்டாம் என்று கூறியுள்ளனர். வயநாட்டில் நீர் இடி எனப்படும் நிலவியல் பாதிப்பினால் தான் நிலச்சரிவு பேரழிவு நேரிட்டது என்றும், அப்படியான பாதிப்புகள் கொடைக்கானலில் ஏற்படாது என்றும், ஆனைமலை புலிகள் காப்பக புவியியல் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.