ஆந்திர மாநிலம் திருப்பதியில் , செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி, தமிழர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருமலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலை ஏழுமலையான் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 20 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி, ஏழுமலையான் கோயில் அருகே தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட 20 தமிழர்களிடம், ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.