தமிழ்நாடு

வாடகைக்கு வீடு இருக்கா? பெண் வேடமிட்டு வந்த கொள்ளையர்கள்!

webteam

சென்னை தி.நகரில் பெண் வேடமிட்டு தம்பதி போல் கொள்ளையடிக்க வந்த இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதன் உரிமையாளரான முதியவர் ராதாகிருஷ்ணன், அந்த வளாகத்தின் பின்புறமே அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு இன்று மதியம் 2 மணியளவில் வாடைக்கு வீடு வேண்டும் எனக் கூறி ஒரு தம்பதி வந்தனர். ராதாகிருஷ்ணன் காலியாக இருந்த ஒரு வீட்டினை திறந்து காட்டியுள்ளார். அப்போது அந்த தம்பதி திடீரென அவரைத் தாக்கியுள்ளது. அத்துடன் அவரையும், அவரது மனைவியையும் கெமிக்கலை பயன்படுத்தி மயக்க மடைய செய்ய முயற்சித்துள்ளது.

இருப்பினும் மயக்கமடையாத முதியவர் ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும் உடனடியாக அலறி அடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த கொள்ளைத் தம்பதியை விரட்டிப் பிடித்துள்ளது. அவர்கள் இருவரும் தம்பதி இல்லை என்பதும், அதில் ஒருவர் பெண் வேடமிட்டு வந்திருப்பதும் அப்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் பாண்டிபஜார் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்களில் ஒருவர் பொறியாளர் பிரசாத் என்பதும், மற்றொருவர் கட்டுமான வேலை செய்யும் சுஜாந்த் என்பது தெரியவந்துள்ளது. இதில் சுஜாந்த் என்பவர் தான் பெண் வேடமிட்டு வந்துள்ளார். அவர்களை கைது செய்துள்ள போலீஸார், இதேபோன்று வேறு எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரித்து வருகின்றனர்.