பிரியா - கார்த்திகா  PT WEB
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | ஓடும் பேருந்தில் 6 சவரன் நகை கொள்ளை... 2 மணி நேரத்தில் சுற்றி வளைத்த போலிஸ்!

கிருஷ்ணகிரி அருகே பேருந்தில் பெண் பயணியிடம் இருந்த 6 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமல் ராஜ்

செய்தியாளர் - கணேஷ்

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே வசிப்பவர் ஸ்ரீகாந்த். இவருடைய மனைவி சத்யா. பள்ளிக்கு கோடை விடுமுறை அறிவித்துவிட்டதால், சத்யா திருவண்ணாமலையில் உள்ள தன் அம்மா வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது மத்தூர் அருகே பேருந்து சென்ற போது, 2 பெண்கள் சத்யாவின் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு அவரை உரசிக்கொண்டே வந்துள்ளனர். திடீரென 2 பெண்களும் தங்கள் கையில் இருந்த காசை கீழே போட்டு இரண்டு மூன்று முறைக்கு மேலே குனிந்து குனிந்து எடுப்பதாகப் பாவனை செய்து வந்துள்ளனர்.

கார்த்திகா

இந்நிலையில் பேருந்து மத்தூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது இரண்டு பெண்களும் அவசர அவசரமாகக் கீழே இறங்கிச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சத்யா தனது, பையை எடுத்துப் பார்த்த போது பையில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 சவரன் தங்க நகை இருந்த பர்ஸ் காணாமல் போயுள்ளது.

பேருந்தில் கதறிய பெண்!

உடனடியாக சத்யா பேருந்திலேயே கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நேரடியாக மத்தூர் காவல்நிலையம் எடுத்துச் சென்றார். இதனையடுத்து போலீசார் சத்யா கூறிய அடையாளத்தை வைத்து மத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த 2 பெண்களும் அந்த பேருந்தில் இருந்து இறங்கி, ஊத்தங்கரை செல்லும் மற்றொரு பேருந்தில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது.

பிரியா

இதனையடுத்து ஊத்தங்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை, சாமல்பட்டி அருகே நிறுத்தினர் காவல்துறையினர். தொடர்ந்து பயணிகள் அனைவரையும் நிற்க வைத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது இந்த 2 பெண்களும் அதில் இருந்துள்ளனர். அவர்கள் தங்களின் உள்ளாடையில் தங்க நகையைப் பதுக்கி வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

2 பெண்களையும் சிறையில் அடைத்த போலீசார்!

இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் லட்சுமி புரத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரின் மனைவி பிரியா என்பதும், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரது மனைவி கார்த்திகா என்பதும் தெரியவந்தது.

மாத்தூர் காவல் நிலையம்

இவர்கள் மீது ஏற்கனவே காவல்நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரின் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.