காணமல் போன விளம்பர மாடலும், கதாசிரியையுமான கானம் நாயரை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் மகள் கானம் நாயர் (28). சென்னை கே.கே. நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதி வந்ததுடன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தார். மாடலிங்கும் செய்து வந்தார். இந்நிலையில் தோழியை பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு, கடந்த 26-ம் தேதி காலையில் தனது டூவீலரில் சென்ற கானம் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர் மகிஜா, கே.கே. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக அலுவலகம் செல்லும் பாதையிலிருந்து விலகி, வேறுபாதையில் கானம் பயணித்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதே போல், அவரது முகநூல், டிவிட்டர் கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். கானம் நாயர் செல்போனும் பயன்பாட்டில் இல்லாத நிலையில், தனிப்படை போலீசார் அவரது அலுவலத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.