மதுபான கடை Twitter
தமிழ்நாடு

மதுபானம் அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரம்: வட்டாட்சியரை மதுபான கடைக்குள் அடைத்ததால் பரபரப்பு!

அரசு மதுபான கடையை ஆய்வு செய்ய வந்த வட்டாட்சியரை, அங்கிருந்தவர்கள் சிறைபிடித்து மதுபான கடைக்குள் அடைத்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

தஞ்சாவூர் கீழவாசலில் இயங்கி வரும் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையையொட்டி அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பாருக்கு இன்று மீன் தொழில் செய்யும் குப்புசாமி (68), விவேக் (36) என்பவர்கள் இன்று மது குடிக்கச் சென்றனர்.

அங்கு டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால், அருகிலிருந்த பாரில் விற்பனை செய்வதாக கூறப்பட்டுள்ளது. இதனையறிந்த குப்புசாமி, அங்கு சென்று மது அருந்தி விட்டு எதிரே உள்ள மீன் வியாபாரம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் அதே பாரில் மது அருந்தி விட்டு, பாரை விட்டு வெளியே வந்த குட்டி விவேக் என்பவரும், அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையறிந்த அருகிலிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில் குப்புசாமி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விவேக் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பின் அவரும் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தஞ்சை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மதுபான வட்டாட்சியர் பிரபாகரன் ஆய்வு செய்தபோது அங்கிருந்தவர்கள் மதுபான கடையில் வைத்து சிறை பிடித்தனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின்னரே அவர் வெளியே வந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவினர் கடையின் முன்பு நின்று இந்த சம்பவம் குறித்து விரிவாக தங்களுக்கு தெரிய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

மது அருந்தி உயிரிழந்த சில நிமிடங்களில் பாரில் இருந்து மது பாட்டில்களை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எடுத்து சென்று உள்ளனர். அந்த காட்சிகளை அருகில் உள்ளவர்கள் தொலைபேசியில் வீடியோ எடுத்து உள்ளனர். இதற்கிடையே அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது.