மோதல் free pik
தமிழ்நாடு

சென்னை: ஊறுகாய்க்காக எழுந்த சண்டை... கடை உரிமையாளர்களை கத்தியால் தாக்கிய கும்பல்!

சென்னை கோடம்பாக்கத்தில், ஊறுகாய் வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி வன்முறைக்கு வழிவகுத்துள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் அசாருதீன், முகமது உசேன். இவர்கள் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று இவர்களது கடைக்கு வாடிக்கையாளராக ஒருவர் வந்து “ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்

அதற்கு கடைக்காரர்கள், “ஒரு ரூபாய் பாக்கெட் இல்லை, ரூ. 5 பாக்கெட் ஊறுகாய் இருக்கிறது” எனக் கூறியதாக தெரிகிறது. ஆனால் தங்களுக்கு ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட்தான் வேண்டும் என தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதில் வாடிக்கையாளருக்கும் சகோதரர்கள் அசாருதீன், முகமது உசேன் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறகு அந்த நபர் தனது நண்பர் ஒருவரை அழைத்து வந்து கடையை சூறையாடி பின் உரிமையாளர்கள் அசாருதீன், முகமது உசேனை தலையில் கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளளார். இதில் 2 பேருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடியது அதே பகுதியைச் சேர்ந்த வினோத், கலையரசன் உள்பட 4 பேர் என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அவர்களை கோடம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.