தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி... மணல் திருட்டின் விலையா இந்த உயிர்கள்?

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி... மணல் திருட்டின் விலையா இந்த உயிர்கள்?

நிவேதா ஜெகராஜா

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் இரண்டு பெண் குழந்தைகள் காவிரி நீர்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதிக்குட்பட்ட சேத்துக்குளியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகள் சுசித்ரா (11), தம்பி தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகள் காமாட்சி (9). இவர்கள் சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், பள்ளி விடுமுறைக்காக அண்ணன் தம்பி இருவரும் தங்களது மகள்களை மேட்டூர் அருகே சேத்துக்குளி பகுதியிலுள்ள தனது பெற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த சிறுமிகள் இருவரும் விடுமுறை முடிந்து நாளை சென்னைக்கு திரும்ப இருந்துள்ளனர்.

இந்நிலையில் தனது பாட்டியுடன் காவிரியில் இன்று குளிக்க சென்றுள்ளனர். முன்னதாக காவிரி நீர்தேக்க பகுதியில் தண்ணீரின்றி வறண்டு இருந்தபோது, மர்ம நபர்கள் உரிய அனுமதியின்றி மண் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்தக் குழியை மூடி விட்டுச் சென்றுள்ளனர். தற்போது தண்ணீர் நிரம்பி இருக்கும் இந்த சூழலில், அந்த இடத்தில் குழி மீண்டும் உருவாகி அங்கு தண்ணீர் நிரம்பியிருந்திருக்கிறது. இதையறியாத சிறுமிகள், அப்பகுதிக்கு நீந்தி சென்றுள்ளனர்.

இதற்கிடையில் துணி துவைத்துக் கொண்டிருந்த அவர்களின் பாட்டி, வெகுநேரமாக குழந்தைகளின் பேச்சு சத்தம் கேட்காததை கேட்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிடுள்ளார். அதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் நீர்த்தேக்க பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி பார்த்தபோது, குழி இருப்பது தெரியாமல் இரண்டு பெண் குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டு வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி நேற்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பிறகு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.