தமிழ்நாடு

ஏடிஎம்மில் பணம் நிரப்பாமல் ரூ. 78 லட்சத்தை கையாடல் செய்த ஊழியர்கள்

ஏடிஎம்மில் பணம் நிரப்பாமல் ரூ. 78 லட்சத்தை கையாடல் செய்த ஊழியர்கள்

webteam

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் பணம் நிரப்பாமல் ரூ. 78 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தை புதுவை ரைட்டர் சர்வீஸ் (Writer Services Pvt) என்ற நிறுவனம் எடுத்திருந்தது. இந்த நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம், தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த காளிங்கன் (28), பிரசாந்த் (28) ஆகிய இருவரும் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இருவரும் பணிக்கு வராமல் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதன் பின்னர் சந்தேகமடைந்த அந்த நிறுவனம் தணிக்கை செய்ததில் இருவரும் ரூபாய் 78 லட்சத்து 21 ஆயிரம் பணத்தை ஏடிஎம்மில் நிரப்பாமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்நிறுவனம் புதுவை கிளை சார்பில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஊழியர்கள் இருவரையும் அதே ஊர் ஏரிக்கரை பகுதியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த ஆறு மாதங்களாக கையாடலில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்