கோவையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில், ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்த பச்சிளம் குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (26). இவரது மனைவி ரம்யா. இவருக்கு இன்று காலை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தைக்குத் தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து குழந்தை, குழந்தையின் தந்தை சிவசங்கர், உறவினர்களான பழனிச்சாமி, சகுந்தலா, வள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர் ஆகியோர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி வழியாக கோவை வந்தனர். ஆம்புலன்சை ரவீந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். ஆம்புலன்ஸ் மலுமிச்சம்பட்டி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் ஆண் குழந்தை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த பழனிச்சாமி, வள்ளி ஆகிய இருவரும் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தலையில் காயமடைந்த சகுந்தலா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் மூலம் சாலையில் கிடந்த ஆம்புலன்சை அப்புறப்படுத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.