அம்பத்தூர் ரயில் நிலையத்தில் மேம்பாலத்தை மக்கள் உபயோகிக்காததால், ரயில்வே கேட்டை கடக்கும் போது ரயில் மோதி பயணிகள் உயிரிழக்கின்றனர்.
சென்னை அருகே உள்ள அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்துக்காக வந்து செல்கின்றனர். இங்கு ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது விபத்துக்கள் நடைபெற்று, உயிர் இழப்புகள் நேர்ந்து வருகிறது. இன்று காலையில் பணிக்கு சென்ற அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற இளம் பெண்ணும், 50 வயது மதிக்கதக்க ஒருவரும் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் மோதி உயிர் இழந்தனர்.
இதுபோன்று ஒரு மாதத்திற்கு குறைந்தது 5 உயிர் இழப்புக்கள் இந்த ரயில்வே கேட்டில் ஏற்படுகிறது. தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் இருந்தும் மக்கள் யாரும் அதை பயன்படுத்துவது இல்லை என்பதே முக்கிய காரணம் என பயணிகள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அந்த மேம்பாலம் ரயில்கேட்டையும் தாண்டி, ரயில் நிலையத்திற்கு வெளியே செல்வதாகவும் இதனால் மக்கள் அதை உபயோகிப்பதில்லை என்று குறை கூறுகின்றனர். அத்துடன் ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் ரயில்வே கேட் இருப்பதாலும் விபத்துக்கள் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றும், ரயில்வே கேட்டை தற்காலிகமாக ரயில் நிலையத்திலிருந்து சற்று தள்ளி போடவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.