தமிழ்நாடு

குழந்தையிடம் செயின் திருட்டு.. சிசிடிவி கேமராவால் சிக்கிய ஆட்டோ டிரைவர்கள்

webteam

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடி அடுத்த கோவில் பதாகை, பூங்கொடி நகரை சேர்ந்தவர் அருள்முருகன்(33). இவரும் இவரது மனைவியும் ஆவடி டேங்க் ஃபேக்டரியில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஹரிபிரியா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்த தம்பதி வேலைக்கு செல்லும் போது, தினமும் தங்களது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் பார்த்து கொள்ளுமாறு விட்டு விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல் தனது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் மாலை வீடு திரும்பியதும் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆவடி பக்தவச்சலபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42), திருவள்ளூர் அருகே வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த நந்தா(42) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் குழந்தையிடம் செயினை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் கூறுகையில், “அருள்முருகன் வீட்டின் அருகே கிரஹப்பிரவேச நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு, ஆட்டோவில் வந்த இரு டிரைவர்கள் குழந்தையிடம் சாதுவாக பேசி அழைத்துள்ளனர். பின்னர், குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை கழட்டி எடுத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடையில் அடகு வைத்திருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர்.