தமிழ்நாடு

தலைவாசல்: கார் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் மோசடி.. இருவர் கைது

தலைவாசல்: கார் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் மோசடி.. இருவர் கைது

webteam

தலைவாசலை சேர்ந்த நபரின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி, நூதன முறையில் பாஸ்டேக் கட்டண மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் இனியன் (44). அவரது கார் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும்போது பாஸ்டேக் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 15ஆம் தேதி மட்டும் 9 சுங்கச்சாவடிகளை கடந்ததாக பணம் மோசடி செய்யப்பட்டிருந்ததை அறிந்த இனியன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ரஜினிகாந்த் விசாரணை நடத்தியதில் திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் (37), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(35) ஆகியோர் இனியனின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தியது தெரியவந்தது.

சம்பவத்தன்று அந்த இருவரும் இனியனின் கார் எண்ணை போலி நம்பர் பிளேட்டாக வைத்துக்கொண்டு சுங்கச்சாவடிகளை காரில் கடந்துள்ளனர். அப்போது சுங்கக்கட்டணம் கேட்ட இடங்களில் சுங்க இலாகா அதிகாரி ஒருவரின் போலி அடையாள அட்டையை காட்டியுள்ளனர். அதனை ஏற்காத சுங்கச்சாவடிகளின் ஊழியர்கள் வண்டி பதிவெண்ணை ரெக்கவரி குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டு கார் கடந்து செல்ல அனுமதித்துள்ளனர். அப்படி அனுமதிக்கப்பட்ட 9 சுங்கச்சாவடிகளிலும் வண்டி எண்ணுடன் இணைவு பெற்ற இனியனின் வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக்கட்டணம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி நூதன மோசடியில் ஈடுபட்ட பாலகணேஷ், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைதுசெய்த போலீசார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.