தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!

தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!

Sinekadhara

தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செலுத்திக்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். தமிழகத்திலுள்ள 166 மையங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பமானது.

முதல் தடுப்பூசியானது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்குமணிக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிறகு முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் கொரோனா தடுப்பூசிகள் போடும்பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அங்கு முனுசாமி என்கிற மருத்துவ ஊழியருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.