தமிழ்நாடு

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

rajakannan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன், நேற்று தீர்ப்பளித்தார். 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் சட்டமீறல் இருப்பதாக தெரியவில்லை என அவர் கூறினார். ஏற்கெனவே இந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அளித்த தீர்ப்பை சாராமல் தன்முன் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். 

இந்த தீர்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு செய்யப்படும் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் இன்று தினகரன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கத் தமிழ்ச்செல்வன், “நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காகவே மேல்முறையீடு செய்ய உள்ளோம். மேல்முறையீடு செல்லும்போதே தேர்தல் அறிவித்தால் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சட்டப்பேரவைத் தலைவர் ஒவ்வொரு முறையும் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்தது தவறு என்பதை உணர்த்துவதற்காகத்தான் மேல்முறையீடு செல்கிறோமே, தவிர பயந்து அல்ல.

உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்கை விரைந்து முடிக்க கோரி மேல்முறையீட்டில் குறிப்பிட உள்ளோம். வரும் 10ஆம் தேதி 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். வெற்றிவேல் சென்னையில் உள்ளதால் அவரால் ஆலோசனைக்கு வரமுடியவில்லை. பார்த்திபன் உடல்நலக்குறைவு காரணமாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. விரைவில் பொதுச்செயலாளர் சசிகலாவை 18 பேரும் சந்திக்க உள்ளோம். 2 அல்லது 3 நாட்களில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தகுதிநீக்கத்தை எதிர்த்து 18பேரும் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் தங்களை ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காக சபாநாயகர் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.