18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு விவரம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சத்யபிரதா சாஹூ, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே தமிழகத்தில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் முழு விவரங்களையும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆணையமே இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
முன்னதாக, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரித்து வந்த 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணன், நேற்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பளித்தார். தமிழகமே மிகவும் எதிர்பார்த்த இந்த வழக்கில், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிபதி தீர்ப்பளித்தார். 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் சட்டமீறல் இருப்பதாக தெரியவில்லை என கூறினார். ஏற்கெனவே இந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அளித்த தீர்ப்பை சாராமல் தன்முன் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அரசு தலைமை கொறடா அளித்த உத்தரவின் அடிப்படையிலும், முதலமைச்சர் பழனிசாமி அளித்த சாட்சியத்தையும் ஆராய்ந்துதான் தகுதிநீக்கம் செல்லும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கக்கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு தானாக விலகுகிறது என்று தெரிவித்தார். எனவே 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது எனக்கூறினார்.