சென்னையில் முழு பொதுமுடக்கத்தை கண்காணிக்க 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு சென்னை காவல்துறை ஆணையர் மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் நாளை முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலுக்கு வரவுள்ள பொதுமுடக்கம் குறித்து பேசிய அவர், நோய்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற வகையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். மக்கள் வாகனங்களில் செல்லமால் நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையை பெரியதாக்கி அணிந்து கொண்டால் அவர்களை அனுமதிப்பது எளிமையாக இருக்கும் எனவும், அத்தியாவசிய தேவை இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள்ளேயே 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையின்றி சென்றால் வாகன பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.
அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிராதான சாலைகள் கடந்த முறையை பொதுமுடக்கத்தைப்போல இந்த முறையும் மூடப்படும் என்றார். திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற பாஸ் செல்லாது எனவும், அந்த பாஸை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார். சென்னையின் உட்புற பகுதிகளிலும் இந்தமுறை சோதனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 18,000 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் எனவும் கூறினார். இதுவரை 788 பேர் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 300 பேருக்கு மேல் குணமடைந்து மீண்டும் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.