குளித்தலை அருகே அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில் ஐடிஐ மாணவன் விக்னேஷை அடித்து கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்கபிள்ளையூரை சேர்ந்த குரு பிரகாஷ் (19) என்பவர் அய்யர்மலை அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கணிதம் படித்து வருகிறார்.
இவரது பெரியப்பா மகனான அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் (16) வைபுதூரில் உள்ள தனியார் ஐடிஐயில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று குருபிரகாஷ் அய்யர்மலை அரசு கல்லூரியில் இறுதி நாளை முடித்துவிட்டு ஊருக்கு செல்ல அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்துள்ளார்.
குரு பிரகாஷுக்கும் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கும் ஆறு மாத காலமாக காதல் இருந்து வந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக இருவருக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், கல்லூரி மாணவி கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் (21) என்பவரை காதலித்து வந்த நிலையில் குரு பிரகாஷ் மீண்டும் கல்லூரி மாணவியை தொடர்புகொள்ள போன் செய்துள்ளார்.
இதை கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவர் அருணிடம் சொல்லவே, கடந்த 14ஆம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. குருபிரகாஷிடம், ”நீ எப்படி போன் செய்யலாம்?” என அருண் கேட்டதில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அருணின் தம்பி சங்கரும், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் செல்லதுரையும் கல்லூரிக்குள் வந்து, அருணிடம் மன்னிப்பு கேட்டு வந்துவிடலாம் என குருபிரகாஷை அழைத்தபோது அவர் மறுத்துள்ளார்.
சம்பவ இடமான அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் குரு பிரகாஷ், அவருடைய பெரியப்பா மகன் விக்னேஷ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் என்கிற அருண், கல்லூரி மாணவர் செல்லதுரை மற்றும் சிலர் குரு பிரகாஷையும், விக்னேஷையும் கல்லாலும், குச்சியாலும் அடித்து, ”இதோடு ஒழிந்து போ” என்று சொல்லி தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதில் காயம்பட்டவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பியதில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விக்னேஷை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். குருபிரகாஷ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குளித்தலை போலீசார் விக்னேஷை அடித்து கொலை செய்த கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த அருண், செல்லதுரை, சரவணன், விஜயபாரதி, சந்தோஷ் குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து குளித்தலை குற்றவியல் நடுவர் எண் ஒன்றில் நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.