கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த சூழலில், மேலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணை வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று பிடிபட்ட சிவகுமாருக்கு, விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் அவர், ஏற்கெனவே கைதான மாதேஷூக்கு மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதேபோல் இன்று கதிர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் கைதான மாதேஷ், ராமர், கண்ணன், சக்திவேல் ஆகியோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா, சின்னத்துரை, மதன்குமார், ஷாகுல் ஹமீது ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் மேற்கொண்டு அய்யாசாமி, தெய்வாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.