ஆம்னி பேருந்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வராத 15 ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே வராத 15-தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

webteam

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Kelambakkam

இந்நிலையில், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் வரும் வழியிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் ஜிஎஸ்டி சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்கின்றன. இதனால் ஆம்னி பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவின் பேரில், சென்னை தெற்கு பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவல் துறையினருடன் இணைந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லாமல் சென்ற ஆம்னி பேருந்துகளை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லாமல் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்ற 15-தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த சோதனையில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், குன்றத்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கே.கே நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களும், கிளாம்பாக்கம் போக்குவரத்து காவலர்களும் ஈடுபட்டனர்.