தமிழ்நாடு

நிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ! ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

நிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ! ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

webteam

17 நாட்கள் நடந்த புத்தக கண்காட்சியில் சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆனதாக பபாசி தெரிவித்துள்ளது

தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 42ஆவது சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4ம் தேதி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் கடந்த ஆண்டைக் காட்டியிலும் இந்த முறை பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட்டு அறிவியல் கண்டுபிடிப்பு, வரலாறு. பொது அறிவு, சிறு கதைகள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. 

வார நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெற்றது. புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், பதிப்பகங்களைப் பொறுத்து கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்பட்டன. இந்த முறை புத்தக கண்காட்சியில் சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, ஏடிஎம், இலவச வைஃபை, செல்போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பாதுகாப்பிற்காக அரங்கை சுற்றிலும் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. 

இந்த புத்தகக் காட்சி வளாகத்தில் அறிவியல், இலக்கியம், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டன. அதே போன்று எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தக ஆர்வலர்கள் சிறப்பு சொற்பொழிவுகளை நடத்தினர். 

கடந்த 17 நாட்களில் புத்தகக் காட்சிக்கு சுமார் 15லட்சம் பேர் வருகை தந்ததாகவும், சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆனதாகவும் பபாசி தெரிவித்துள்ளது. புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பதிப்புத்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பங்காற்றி‌ய 30 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வழக்கத்தை விட இந்த ஆண்டு புத்தக கண்காட்சி அதிக நாட்கள் நடைபெற்றன. இந்த கண்காட்சியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வாசகர்களின் வருகையும் அதிகரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.