தமிழ்நாடு

விளாத்திகுளம்: மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த 15 ஆடுகள்!

விளாத்திகுளம்: மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த 15 ஆடுகள்!

PT WEB

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூசனூர் கிராமத்தில் 15 ஆடுகள் மர்மான முறையில் உயிரிழந்தது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தை சேர்ந்த முனியசாமி-சுப்புலட்சுமி தம்பதியினர் 30-க்கும் மேற்பட்ட ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். இன்று வழக்கம்போல முனியசாமி ஆடுகளை மேய்ப்பதற்கு முன்பு தெருவில் உள்ளவர்களிடம் பழைய உணவு கஞ்சிகளை வாங்கி ஆடுகளுக்கு குடிப்பதற்காக வைத்துள்ளார்.

இந்த பழைய கஞ்சியை சாப்பிட்ட ஆடுகள் ஊரில் உள்ள கண்மாய் கரையில் ஒவ்வொன்றாக வாயில் நுரை தள்ளிபடி, வயிறு வீங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து உள்ளன. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முனியசாமி-சுப்புலட்சுமி தம்பதியினர், குளத்தூர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து கால்நடை மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் கால்நடைகளின் உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்று பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்தான் ஆடுகள் எதனால் இறந்தது என தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பூசனூர் கிராமத்தில் முனியசாமியின் 15 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தங்களின் வாழ்வாதாரமான ஆடுகளை இழந்து தவிக்கும் இவர்களுக்கு அரசு சார்பில் ஏதேனும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.