தனது தாய்க்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கோபத்தில் தான் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தாயாருக்கு கடந்த மே மாதம் முதல் கடந்த மாதம் வரை மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சைக்காக சென்றதாக விக்னேஷ் கூறியுள்ளார். தாய்க்கு கீமோ சிகிச்சை மட்டும் கொடுத்த நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாதததால் தனியார் மருத்துவரிடம் தாயை அழைத்துச் சென்றதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டிய விக்னேஷ், தனியார் மருத்துவமனையில் ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு சென்றபோது 20 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் அதனை மருத்துவர் பாலாஜி தர வேண்டும் என்றும் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, தான் மறைத்து வைத்த கத்தியால் மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். நுரையீரல் புற்றுநோய்க்காக பிரேமாவுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.