சென்னை புதிய தலைமுறை
தமிழ்நாடு

காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடி கைது: 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!

சென்னையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு, 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

சென்னையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு, 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையின் லூப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் காருடன் நின்றிருந்த சந்திரமோகன், அவரது தோழி தனலட்சுமி ஆகியோரை அங்கிருந்து புறப்பட கூறியுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து, பணியிலிருந்த காவலர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். அத்துடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரையும் பயன்படுத்திய அவர்கள், தங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

இவை அனைத்தையும் பணியிலிருந்த காவலர்கள் வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்த நிலையில், கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல், அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தடுத்தல் ஆகியவை உட்பட மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இப்புகாரின்கீழ், மயிலாப்பூர் காவல் துறையினர் சந்திரமோகனையும், தனலட்சுமியையும் நேற்று கைது செய்தனர்.

இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைதான பிறகு அந்த நபர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவருக்கும் 15 நாள்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.