ஆன்லைன் மோசடி புதியதலைமுறை
தமிழ்நாடு

தொழிலதிபர்களுக்கு குறி..வாட்ஸ்அப் குழு மூலம் பக்கா ஸ்கெட்ச்..கோடிகளில் நடக்கும் மோசடி! பகீர் பின்னணி

முதலீடு செய்யும் பணத்தை விட 500 மடங்கு லாபம்; டிரேடிங் ஆசைவார்த்தைக் கூறி தொழிலதிபர்களை மட்டுமே குறிவைத்து மோசடி செய்து வந்த கும்பல்.

ஜெ.அன்பரசன்

Whatsapp குழு அமைத்து ஆன்லைன் டிரேடிங்... தொழிலதிபரிடம் 14.5 கோடி ரூபாய் மோசடி செய்த 6 சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது.

WhatsApp மூலம் குழு தொடங்கி ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என பொதுமக்கள் நம்பும் வகையில் Share Investment APP-களை உருவாக்கி அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான செய்தி பரிமாற்றங்கள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த ஆறு நபர்களை மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்த ட்ரேடிங் பிசினஸ் தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டைச் சேர்ந்த இளேடா என்ற பெண் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொழிலதிபர் குறித்த விவரங்களை சரியாக கூறிய இளேடா, தானும் டிரேடிங் பிசினஸ் செய்து வருவதாகவும் தன்னுடன் சேர்ந்து பிசினஸ் செய்தால் பல மடங்கு லாபம் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த தன்னுடைய பிசினஸ் பார்ட்னர் தங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டிய வழிமுறைகளை கூறுவதாகவும், உலக அளவிலான டிரேடிங் பிசினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குரூப்பில் தங்களை இணைத்து விடுவதாகவும் அதன் மூலம் தனது நண்பர் உங்களுக்கு வழிகாட்டுவதாகவும் கூறியுள்ளார்

இளேடா மூலம் தொடர்பு கொண்ட நபர் தான், "Black Rock Asset Management Business School" என்ற நிறுவனம் வைத்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், தான் நடத்தி வரும் Black Rock நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து அதன் மூலம் சில மாதங்களில் பல கோடி ரூபாய் லாபம் பெறுவதாகவும் தாங்களும் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மாதங்களில் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும், தனது நிறுவனம் SEBI-யால் அனுமதிக்கப்பட்டது எனவும், லாபத்தில் தனக்கு 20 சதவீதம் தர வேண்டும் எனக் கூறி "BRIIFLPRO" என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார். இதனை நம்பி, அந்த செயலி மூலம் தொழிலதிபர் பல்வேறு தவணைகளாக வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 14.5 கோடியை முதலீடு செய்துள்ளார்.

அதன்பின் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முதலீடு குறித்து கேட்டபோது, சரியான பதில் வராததாலும், முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததாலும் ஏற்கனவே தொழிலதிபர்கள் நிறைந்த Whatsapp குழுவில் கேட்டுள்ளார். சுதாரித்துக் கொண்டு whatsapp குழு கலைக்கப்பட்டுள்ளது. பின்னர், தான் ஏமாற்றபட்டதை அறிந்து மாநில சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் புஷ்பா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ரூபாய் 14.5 கோடி பணம் 13 வங்கி கணக்குகளுக்கு மாறி மாறி சென்றுள்ளது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து முதன்முறையாக அனுப்பப்பட்ட வங்கி கணக்கை ஆய்வு செய்த போது அந்த வங்கி கணக்கு செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சுப்ரமணியன் வங்கி கணக்கில் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தமாக பணம் மாறிய 13 வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி சுப்பிரமணியனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து சுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு நீலாங்கரையைச் சேர்ந்த மதன்(43), திருநின்றவூரை சேர்ந்த சரவண பிரியன் (34), ஆவடியை சேர்ந்த சதீஷ் (46), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷாபகத்(38), மதுரை பொன்மேனியைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் ட்ரேடிங் ஆசை வார்த்தை கூறி தொழிலதிபதிபர்களை மட்டுமே குறி வைத்து மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மோசடி செய்யும் பணத்தில் சுப்பிரமணியனுக்கு ஒரு சதவீதம் எனவும் அவர், அடுத்ததாக பணம் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு சொந்தக்காரரான மதன் என்பவருக்கு 1.5 சதவீதம், அவர் அதற்கு அடுத்தது பணம் அனுப்பும் வங்கி கணக்குக்கு சொந்தக்காரரான சரவண பாண்டியனுக்கு 1.5 சதவீதம், மணிகண்டனுக்கு 3 சதவீதம் என இப்படி மாறி மாறி மோசடி செய்யும் கும்பலுக்கு மொத்தமாக கை மாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் மணிகண்டன், மதன், சரவண பாண்டியன் ஆகியோர் பிரபல சினிமா தயாரிப்பாளரின் கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்து வந்ததும் அதிலிருந்து மணிகண்டன் என்பவர் ஆன்லைன் மூலமாக மோசடி செய்யும் கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டு அனைவரையும் ஒன்றிணைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கி கணக்குகளை போலீசார் தொடர் ஆய்வு மேற்கொண்டபோது மதுரையைச் சேர்ந்த விக்னேஷ், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஹிராசிங் தானிக், சங்கீத் ஜெயின் ஆகியோர் மோசடி கும்பலின் முக்கிய இடைத்தரகர்களாக இருந்து வந்து இவர்களை ஒருங்கிணைத்து வந்ததும் தெரியவந்தது.

இதில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் தேனியில் ஆன்லைன் மோசடி வழக்கு ஒன்றில் தேனி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், அதே போல ஹிராசிங் தானிக் என்பவர் உத்தர பிரதேசத்தில் தொழிலதிபரிடம் ஒருவரிடம் கோடி ஆன்லைன் மோசடி செய்த வழக்கில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா கௌதம் புத்தா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுப்ரமணியன் வங்கி கணக்கு மீது (சுப்ரமணியன் மீதும்) தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் 13 சைபர் கிரைம் மோசடி வழக்குகள் பதிவாகி இருப்பதும், மணிகண்டன் வங்கி கணக்கின் மீது உத்திர பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் ஐந்து சைபர் கிரைம் மோசடி வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மொத்தமாக எத்தனை நபர்களிடம் இதே போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்தும், மோசடி கும்பலின் இடைத்தரங்களாக செயல்பட்டு தற்போது உத்திர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிராசிங் டானிக் மற்றும் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளும் பணியில் தற்போது மாநில சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? வெளிநாட்டில் இருந்து பேசிய பெண் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.