சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மீண்டும் கூடவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் அமைதியாக தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து கடற்கரையை ஒட்டிய ஐஸ் அவுஸ் பகுதியில் வன்முறையில் முடிந்தது. தற்போதும், மாணவர்களை மெரினாவில் மீண்டும் கூடும்படி சமூக வலைதளங்களில் அழைப்பு விடப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு இன்று முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என சென்னை பெருநகரக் கூடுதல் காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். இதனால், மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலி உள்ளிட்டவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், மெரினாவில் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்றும் கூடுதல் ஆணையர் சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மெரினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன், நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.