கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இன்று மாலை 6 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி, “இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து கொண்டு, அடிப்படைத் தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரலாம். பொது இடங்களுக்கு வரும்போது 3 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக் கூடாது.
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும். உணவகங்களில் பார்சல் பெற்றுச் செல்ல அனுமதியுண்டு. அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், டாக்சிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயங்காது. தமிழகத்தில் அண்டை மாநிலங்களின் எல்லைகளும், அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான எல்லைகளும் மூடப்படும்.
தேர்வுப் பணிகள் மற்றும் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தவிர, பிற ஆசிரியர்களும், ஊழியர்களும் வரும் 31 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணிபுரியலாம். இன்று நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ப்ளஸ் 2 தேர்வு, திட்டமிட்டபடி நடைபெறும். நாளை மறுநாள் அதாவது மார்ச் 26-ஆம் தேதி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த ப்ளஸ் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இதேபோல, அனைத்து பிற வகுப்புகள், கல்லூரி மற்றும் அரசுப்பணிகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் தரிசனங்கள் நிறுத்தப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும். மார்ச் 16 ஆம் தேதிக்கு முன்னர் முடிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். அதில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.